×

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று (சனி) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மார்ச் 6ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன்பிறகு காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்தில் கோமதி சங்கர் பட்டர் கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பல வகையான 16 அபிஷேகங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சோடச மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் மற்ற கால பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து திருவிழா வரும் மார்ச் 8ம்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 5ம் திருவிழா மார்ச் 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. 3ம்தேதி 7ம் திருவிழாவையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மற்ற கால பூஜையை தொடர்ந்து 5 மணிக்கு மேல் திருக்கோயிலில் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும் காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருதலும், அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது, மாலை 4.30 மணிக்கு மேல் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம்திருவிழா நடைபெறும் 4ம் தேதி பகல் 11,30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

10ம் திருவிழாவான 6ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் முதலில் விநாயகர், அதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 7ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி 12ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு 9மணிக்கு சுவாமி, அம்மன் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார்.

Tags : Masith festival ,Thiruchendur , Masith festival started with flag hoisting at Tiruchendur temple
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்