×

ஆத்துப்பாலம் வரையிலான உக்கடம் மேம்பால 2ம் கட்ட பணி 85 % நிறைவு

கோவை:  கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல்கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. மேலும், உக்கடத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்கு தளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட மேம்பால பணிகளுக்காக நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்ட மேம்பால பணி சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது’’ என்றார்.


Tags : Ukkadam ,Athupalam , 2nd phase of Ukkadam flyover to Athupalam is 85% complete
× RELATED ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்