முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தால் மாற்று தேதி கிடைக்காது: தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் பதில்

புதுடெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2023-24ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு வரும் மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “நீட் பயிற்சிக்காகவே மாணவர்கள் ஒருநாளில் 12 மணி நேரத்தை செலவிடுவதால், அவர்களுக்கு தேர்வுக்கு தயாராக போதிய நேரமில்லை. மேலும், எம்பிபிஎஸ் மாணவர்கள் தங்களது இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.  அப்போது தேசிய தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா படி, “மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வுக்கு நாடு முழுவதுமிருந்து 2.09 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வை ஒத்தி வைத்தால் மாற்று தேதி விரைவில் கிடைக்காது” என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதி மன்ற அமர்வு, வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

Related Stories: