திருவள்ளூர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகான சிறப்பு வகுப்பு நடத்தும் வகையில், கற்போர் வட்டம் எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு பணிகளில் மாவட்ட இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாகவும், அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகளுக்கான, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள ”கற்போர் வட்டம்” எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருமான வி.இராஜாராமன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.
முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கா.விஜயா அனைவரையும் வரவேற்றார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் இராஜாராமன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களில் சிறப்பு செயலாக்கத் துறையின் கீழ், பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். கல்விச் செல்வம் என்பது முக்கியமான ஒன்று. எனவே, அக்கல்வியை வைத்து தான் நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக வழிகாட்டுதல் மையம் அமைப்பது மட்டுமின்றி, கற்றலுக்கான சூழல் தேவைப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தங்களது முத்திரையை பதிக்க வேண்டும் என்றால் இவ்வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசும்போது, கற்போர் வட்டம் என்பது அடிப்படையாக ஒரு கற்றல் மையம் ஆகும். இதற்காக அரசு தேர்வுகளுக்காகவும் சரி, தனியார் வேலைவாய்ப்புக்கான தேர்வுகளுக்காவும் சரி மாணவர்களை பொறுத்தவரை சென்னைக்கோ, அருகில் இருக்கக்கூடிய மாவட்ட தலைநகரங்களுக்கு வந்து பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனைமாற்ற வேண்டும் என்பது தான் நோக்கமாகும்.
இந்த கற்போர் வட்டத்தில் மூன்று அடுக்குகள் ஏற்பாடு செய்திருக்கிறோம். முதலாவாதாக ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அந்தந்த ஊராட்சியில் இருக்கக்கூடிய நூலகங்கள் ஒவ்வொன்றிலுமே கற்போர் வட்டம் கார்னர் என்ற ஒன்றை ஆரம்பிக்கப்படும். இந்த கற்போர் வட்டத்தின் கார்னரில் என்னென்ன அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன. அதற்கு என்னென்ன தகுதிகள், என்னென்ன பாடப்புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவது நோக்கம், அந்தந்த ஊராட்சிகளிலிருந்து ஊராட்சி ஒன்றிய அளவில் அதாவது 14 வட்டாரங்களிலும் இதே மாதிரி ஒரு கற்போர் வட்டம் மையம் துவங்கப்படும்.
ஒரு சில பாடங்களுக்கு அங்கேயே வகுப்புகள் எடுப்பதற்கும். ஒரு சில பாடங்களுக்கு இங்கிருந்தே இணையதளம் வாயிலாக வகுப்புகள் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, இன்றைக்கு துவக்கி வைக்கின்ற இந்த மையத்தில் தான் முக்கியமான வகுப்புகள் நடைபெறுகிறது. எழுத்து பயிற்சிக்கும். வீடியோ விரிவுரைகளுக்கும், டெஸ்ட் பேக்கர் டிசைன் பண்ணுவதற்கும், டெஸ்ட் பேப்பர் மதிப்பீடு செய்வதற்கும் இந்த கற்போர் வட்டம் மையம் செயல்படும். எனவே, இந்த மூன்று அடுக்கு அமைப்பின் மூலம் அரசு மற்றும் அரசு சேர்ந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்காக இம்மையம் உதவிகரமாக இருக்கும்.
இதற்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. அப்படியில்லாமல், அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும் விதமாக ஒரு நிரந்தர பயிற்சி மையம் இன்றைக்கு ஆரம்பித்துள்ளோம். கட்டாயமாக இந்த கற்போர் வட்டம் மையத்திலிருந்து அடுத்த அரசு தேர்வின் ரிசல்ட் நல்ல முறையில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில், ”கற்போர் வட்டம்” எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆரிஷ், திருவள்ளூர் சப் - கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
