திருத்தணி அருகே பரபரப்பு: கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து

* 25 மாணவிகள் காயம்

* தனியார் பேருந்து டிரைவர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு நாள்தோறும் திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதி மாணவிகள் கல்லூரி மற்றும் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாடகை வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவிகளை நேற்று காலை  ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது, திருத்தணி சாலையில் நின்றிருந்த மாணவியை ஏற்றி செல்வதற்காக தனியார் கல்லூரி பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி வேகமாக தனியார் பயணிகள் பேருந்து, சாலையில் நின்றிருந்த கல்லூரி பேருந்தின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், கல்லூரி பேருந்தில் இருந்த கிளினர் கோவிந்தராஜ், மாணவிகள் சங்கீதா, மோனிஷா, திவ்யா, ரேஷ்மா, ஹேமா, பிரியா உள்பட 25க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேப்போல், தனியார் பேருந்தில் வந்த 4  அரசு கல்லூரி மாணவர்கள், 4 பொதுமக்கள் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு விபத்தில் காயமடைந்த மாணவிகளை கல்லூரி தாளாளர் பாலாஜி, முதல்வர் வேதநாயகி, கல்லூரி துணை முதல்வர் பொற்செல்வி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஷ்ரத்பேகம், டிஎஸ்பி விக்ேனஷ், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் கமல், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தனியார் பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: