×

சென்னையில் ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த 12 பேர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: கண்ணீர் மல்க உறவினர்கள் வரவேற்றனர்

சென்னை: சென்னையில் சாலைகளில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த 12 பேர் ‘காவல் கரங்கள்’ மூலம் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் மாநகர காவல்துறை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். சென்னையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரியும் நபர்கள் ‘காவல் கரங்கள்’ மூலம் மீட்கப்பட்டு அவர்களுக்கு காப்பகம் மூலம் சிகிச்சை அளித்து குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் சாலையில் சுற்றி திரிந்து வந்த 12 பேர் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் உடல்நிலை மற்றும் மனநிலை சற்று முன்னேறியவுடன் அவர்களிடம் ‘காவல் கரங்கள்’ அமைப்பின் மூலம் நேரடியாக விசாரிக்கப்பட்டு அவர்கள் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் அவர்களது முகவரி கண்டறிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும், பொதுமக்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களது புகைப்படத்தை காண்பித்து விசாரிக்கப்பட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் என 12 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முகவரி கண்டறியப்பட்டது. இதில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர்களும் அடங்குவர்.

அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் 12 பேரையும் அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் லோகநாதன் மீட்கப்பட்ட 12 பேரையும், அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைத்து, 15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார். அப்போது அந்த குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அப்போது, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Chennai , 12 homeless homeless in Chennai handed over to families: tearful relatives welcome
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...