×

நாகர்கோவில் பஸ் நிலையம் அருகே இன்று குழாய் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு மக்களுக்கு குடிநீர் முக்கடல் அணையில் இருந்து கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லைகள் விரிப்படுத்தப்பட்டபிறகு குடிநீர் தேவைகள் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்டபணிகளுக்காக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது உள்ள குடிநீர் குழாய்கள் கடந்த 25 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது. இதனால் தண்ணீர் அழுத்தமாக வரும்போது குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஓடும் நிலை இருந்து வருகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் சரிசெய்து மீண்டும் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வரும் நிலை இருந்து வருகிறது.
இதேபோல் இன்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைத்திற்கும் வேப்பமூடு ஜங்சனுக்கும் இடையே 2 இடங்களில் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் ஓடுகிறது. இதுபோல் கோட்டார் போலீஸ் நிலையம் அருகேயும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலத்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக முக்கடல் அணையில் இருந்து 3 குழாயில்களில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது எந்த பகுதிக்கு திறக்கப்படுகிறதோ, அந்த பகுதியில் உள்ள வால்வுகள் திறந்து இருக்க வேண்டும்.

ஆனால் திறக்காமல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திறக்கும்போது அழுத்தம் தாங்காமல் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலை இருந்து வருகிறது. இதுபோல் வேறு பணிக்காக சாலைகளை உடைக்கும்போதும், குடிநீர் குழாய்கள் சேதமாகி தண்ணீர் வெளியேறும் நிலை இருந்து வருகிறது. இதனை தவிர இந்த குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே உடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி குடிநீர் விநியோகம் செய்து வருகிறது என்றார்.


Tags : Nagargo , A broken pipe near Nagercoil bus stand today and water flowing on the road
× RELATED சென்னை ரயிலில் போலி டிடிஆர் கைது