×

உலகப் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா: 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் செயற்குழு உறுப்பினர்கள் சந்தீப்குமார், நந்தகுமார் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா வரும் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடக்கிறது. முதல் நாள் விழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தோற்றம் பாட்டு என்ற கண்ணகி தேவி வரலாறு பாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாடப்படும் வரலாற்று பாடலுக்கு ஏற்ப அன்றையதினம் பூஜை நிகழ்ச்சிகள் நடக்கும்.

பொங்காலை நடக்கும் மார்ச் 7ம் தேதி கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்து வெற்றியுடன் ஆற்றுகால் கோயிலுக்கு வருகைதந்து குடியிருக்கும் பாடல் பாடப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் 3ம் நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் பங்கேற்கின்றனர். 9ம் நாள் விழாவன்று மாலை சிறுவர்களை மிக அழகாக அலங்கரித்து தேவியின் திருநடை முன்பு அழைத்து வருவார்கள்.

அம்மன் வீதி உலா செல்லும் சமயத்தில் சிறுவர்களின் விலாவின் 2 பகுதிகளிலும் கொக்கிபோன்ற உலோகத்தை குத்திக்கொள்வார்கள். அம்மன் வீதியுலா முடிந்து மீண்டும் ஆலயத்துக்குள் வந்ததும் விலா பகுதியில் உள்ள உலோக கொக்கிகள் அகற்றப்படும். இந்த நிகழ்வு குத்தியோட்டமாகும். மார்ச் 7ம் தேதி பிரசித்திபெற்ற ஆற்றுகால் பொங்காலை விழா நடக்கிறது. காலை சுத்த புண்யாக சடங்கை தொடர்ந்து 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்காலையிடுவார்கள்.

2020ம் ஆண்டு பொங்காலை விழாவில் 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா வீடுகளில் நடத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். திருவிழா தொடங்கும் அன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Bhagavati Amman Temple Pongala Festival , World Famous Riverside Bhagwati Amman Temple Pongal Festival: Commencement with Flag Hoisting on 27th
× RELATED தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு...