×

திருக்கோயில்கள் சார்பில் 2ம் கட்டமாக 161 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருக்கோயில்கள் சார்பில் 2ம் கட்டமாக 161 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு,  சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் 19 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்களின் சார்பில் இரண்டாம் கட்டமாக 161 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2022-2023ம் ஆண்டிற்க்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த 04.12.2022 அன்று முதற்கட்டமாக திருவான்மியூரில் சென்னை மண்டலங்களை சேர்ந்த திருக்கோயில்களின் சார்பில் 31 இணைகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 இணைகளுக்கும் ஆக மொத்தம் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.  

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 19 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்களின் சார்பில் 161 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யத்துடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவை, சீர்வரிசைப் பொருட்களாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இரண்டாம் கட்டத்தில் வேலூர் மண்டலத்தில் 12 இணைகளுக்கும், சேலம் மண்டலத்தில் 17 இணைகளுக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 8 இணைகளுக்கும், தஞ்சாவூர் மண்டலத்தில் 17 இணைகளுக்கும், மயிலாடுதுறை மண்டலத்தில் 3 இணைகளுக்கும், விழுப்புரம் மண்டலத்தில் 4 இணைகளுக்கும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 9 இணைகளுக்கும், மதுரை மண்டலத்தில் 5 இணைகளுக்கும், சிவகங்கை மண்டலத்தில் 12 இணைகளுக்கும், திருநெல்வேலி மண்டலத்தில் 3 இணைகளுக்கும்,  காஞ்சிபுரம் மண்டலத்தில் 8 இணைகளுக்கும், ஈரோடு மண்டலத்தில் 2 இணைகளுக்கும், திருப்பூர் மண்டலத்தில் 13 இணைகளுக்கும், திருவண்ணாமலை மண்டலத்தில் 13 இணைகளுக்கும், கடலூர் மண்டலத்தில் 10 இணைகளுக்கும், தூத்துக்குடி மண்டலத்தில் 9 இணைகளுக்கும், திண்டுக்கல் மண்டலத்தில் 16இணைகளுக்கும் ஆக மொத்தம் 161 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் திருக்கோயில்களின் சார்பில் 378 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tirukoils ,Minister ,Segarbabu , Temple, Marriage, Marriages, Order, Minister Shekhar Babu
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...