திருப்பத்தூர் அருகே டெய்லர் கடையில் பரபரப்பு தாய் கண்முன்னே தந்தையை கத்திரிக்கோலால் 14 இடங்களில் குத்திய மகன்-மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே தாய் கண்ணெதிரே தந்தையை கத்திரிக்கோலால் 14 இடங்களில் குத்தி கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருப்பத்தூர் அடுத்த, கந்திலி அருகே கசி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(62), டெய்லர். இவருக்கு வெற்றி செல்வன்(36) என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதி எல்லை பாதுகாப்பு படையில் போலீசாக கோயம்புத்தூரில் உள்ளார். மேலும், வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஒரு ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில், ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக  வீடு உள்ளது. இதனை விற்று அந்த பணத்தை தரவேண்டும் என வெற்றி செல்வன் தனது தந்தை ஆதிமூலத்திடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால், அந்த வீட்டை விற்க ஆதிமூலம் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வெற்றிச்செல்வன் தந்தையின் கடைக்கு சென்று தந்தை ஆதிமூலம், தாய் வெங்கடேஸ்வரி ஆகியோரிடம் வீட்டை விற்று பணத்தை தரவேண்டும். இல்லையென்றால் விலை உயர்ந்த பைக்கை வாங்கி தரவேண்டும் என குடிபோதையில் தகராறு செய்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஸ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்து கத்திரிக்கோலை கொண்டு 14 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஆதிமூலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டிஎஸ்பி கணேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு  சென்னைக்கு தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை திருப்பத்துார் பஸ் நிலையத்தில் நேற்று சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பட்டப்பகலில் தாய் கண் முன்னே தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை முயற்சி செய்த வாலிபரை 30 நிமிடத்தில் பிடித்த போலீசாரை எஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Related Stories: