திருமங்கலம்: ‘உச்சநீதிமன்ற தீர்ப்பால் இனி ஓபிஎஸ்க்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் மகள் பிரியதர்சினி - முரளி திருமணம் உள்ளிட்ட 51 ஜோடிகளின் சமத்துவ சமுதாய திருமணம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள டி.குன்னத்தூரில் நேற்று நடந்தது. இந்த திருணமத்தை நடத்தி வைத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘நேற்று (நேற்று முன்தினம்) இரவு அதிமுக கட்சி தொடர்பான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்றவுடன் மனத்தில் ஒரு அச்சம் ஏற்பட்டது. தீர்ப்பு என்னவாக இருக்கும் என எண்ணி எண்ணி இரவில் தூக்கமே இல்லை.
பலரும் என்னிடம் போனில் பேசினர்’ என்று தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘பொதுக்குழு செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் கட்சி பொதுச்செயலாளர் குறித்து முடிவு செய்யப்படும். ஓபிஎஸ் தரப்பில் இருந்து பலரும் எங்களுடன் வந்து சேர்வார்கள். ஓபிஎஸ் தரப்பில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அதிமுகவிற்கு உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் தாராளமாக கட்சிக்கு மீண்டும் வரலாம். ஒரு சிலரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அந்த ஒரு சிலர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.
