சிறையில் அதிகாரிகள் சோதனை; சுகேஷ் அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான செருப்பு சிக்கியது

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் அடைக்கப்பட்டிருந்த டெல்லியின் மண்டோலி சிறை அறையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான காலணி மற்றும் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ்கள் கைப்பற்றப்பட்டன. இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017ல் டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீசாரின் எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை டெல்லியில் மண்டோலியில் உள்ள சிறையில் அடைத்தது.

கடந்த வாரம், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 9 நாள் அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சுகேஷ் அடைக்கப்பட்டிருந்த டெல்லி மண்டோலியில் உள்ள சிறையில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குஸ்ஸி பிராண்ட் செருப்பு மற்றும் தலா ₹80,000 மதிப்பிலான 2 ஜீன்ஸ்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. மேலும், பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: