×

பைக் மீது பொக்லைன் மோதியதில் கூலி தொழிலாளி உடல் நசுங்கி பலி: பல்லாவரம் அருகே சோகம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வேலை நிமித்தமாக தனது பைக்கில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருநீர்மலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் இயந்திரம் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டன் பைக்கின் மீது பலமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் மீது பொக்லைன் இயந்திரத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த மணிகண்டன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, பொக்லைன் இயந்திரம் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Laborer ,Pallavaram , Laborer crushed to death when powerline collided with bike: Tragedy near Pallavaram
× RELATED ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி