×

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் ஆகிய புத்தகங்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்ன: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” மற்றும் “குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார்.
 
கொத்தடிமைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய தடைக்கல்லாகும். இதனை களைந்திட, கொத்தடிமைத் தொழிலாளர் முறையை 2030-ஆம் ஆண்டிற்குள்ளும், குழந்தைத் தொழிலாளர் முறையை 2025-ஆம் ஆண்டிற்குள்ளும் முற்றிலுமாக அகற்றிட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.     

இந்த இலக்கினை அடைந்திடும் வகையில், கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் காணுதல், விடுவித்தல், மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல், கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு சீரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு  குறைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிடப்பட்ட “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” புத்தகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையின் காரணிகள் மற்றும் சட்ட விதிகள், கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், சட்ட அமலாக்க நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் பயிலரங்கம் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன,

அதேபோன்று, “குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” புத்தகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பயிலரங்கம், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் பயன்கள், குழந்தைத் தொழிலாளர்  முறை அகற்றுதல் தொடர்பான உயர்மட்ட கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்புத்தகங்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொடர்புடைய பல்வேறு துறைகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.   

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ,ஆ,ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.  


Tags : G.K. Stalin , Abolition of bonded labor system, abolition of child labor system, published books, Chief Minister M.K.Stalin
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...