×

ராமேஸ்வரம் கடற்கரையில் படகுகள் நிறுத்த ரூ.23 கோடியில் புதிய ஜெட்டிப்பாலம்: கட்டுமானப்பணிகள் துவக்கம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக மீன்பிடி படகுகள் நிறுத்தும் ஜெட்டிப்பால கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு படகுகளை நிறுத்தி மீன்களை இறங்குவதற்கு போதிய கட்டுமான தளங்கள் வசதி செய்யப்படவில்லை. இப்பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கான ஜெட்டி பாலம் 1975களில் கட்டப்பட்டது. பாலம் தற்போது சேதமடைந்துள்ளதால், 15 படகுகள் மட்டுமே நிறுத்தி மீன்கள் இறக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

இதனால் மீதமுள்ள விசைப்படகுகள் அனைத்தும் கடலில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும், பலத்த காற்று வீசும் காலங்களில் படகுகள் இழுத்துச் செல்லப்படாமல் மற்றும் கவிழாமல் நிறுத்துவதற்கு பாலத்தில் ேபாதிய இடவசதி இல்லை. இதனால் பலத்த காற்றில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைகின்றன. இதனைத் தவிர்க்கவும், படகுகளை நிறுத்தி மீன்களை இறக்குவதற்கு வசதியாகவும் புதிதாக படகு நிறுத்தும் தளம் அமைக்க ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் ரூ.23 கோடியில் ‘டி’ வடிவிலான புதிய ஜெட்டிப்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதற்கான நிதி மீன்வளத்துறையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், டெண்டர் விடப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் தற்போதைய பழைய ஜெட்டிப்பாலத்தில் இருந்து கடலுக்குள் 200 மீ நீளத்திற்கு புதியதாக அமைய உள்ளது. மேலும் இதன் முனையில் இருபுறமும் தலா 75 மீ. அளவில் ஆங்கில எழுத்தான ‘T’ வடிவில் 150 மீ அகலத்தில் ஜெட்டிப்பாலம் அமைகிறது.

இந்த புதிய ஜெட்டிப்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில், இதில் 150 விசைப்படகுகள் வரை நிறுத்தவும், மீன்களை படகில் இருந்து இலகுவாக இறக்கி வைக்கவும் முடியும். புதிய ஜெட்டிப்பாலம் வரும் மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Tags : Rameswaram beach , New Rs 23 crore jetty bridge to berth boats at Rameswaram beach: Construction begins
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு