×

குஜிலியம்பாறை அருகே வீடு புகுந்து 170 பவுன் நகைகள் கொள்ளை: அடுத்தடுத்து 3 வீடுகளிலும் கைவரிசை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே வீடு புகுந்த மர்ம நபர்கள் 170 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமென்ட் ஆலையில் மேலாளராக திருநாவுக்கரசு (55) பணிபுரிந்து வருகிறார். இவர் ஆலைக்கு சொந்தமான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மனைவி கவிதா (49). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக கரூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மனைவியை பார்க்க திருநாவுக்கரசு கரூர் சென்றுள்ளார். நேற்று காலை தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வாசல் கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 170 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் அதே குடியிருப்பில் உள்ள உதவி பொது மேலாளர்களான செந்தில் (42) வீட்டில் ரூ.10 ஆயிரம் பணம், பாஸ்கர் (43) வீட்டில் ரூ.40 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வேல்முருகன் (59) என்பவரது வீட்டை உடைத்து பீரோவை பார்த்தபோது, அதில் எதுவும் இல்லாததால் விட்டுச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி மற்றும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில்வர் குடத்தை வீசி சென்றது ஏன்?: தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு 2 இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ராணி மெய்யம்மை நகரில் 150 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் குடியிருப்பு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆளில்லாத 4 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இங்குள்ள 150 வீடுகளில் 4 வீடுகளில் மட்டும் ஆளில்லாமல் இருப்பது தெரிந்து மர்ம நபர்கள் எப்படி கொள்ளையடித்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த திருநாவுக்கரசு வீட்டில் இருந்து சில்வர் குடத்தை தண்ணீரோடு எடுத்துக் கொண்டும், வீட்டில் இருந்த ஒரு பேண்ட், சட்டையை எடுத்து கொண்டும் காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள முட்புதரில் மர்ம நபர்கள் போட்டு சென்றது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Tags : Kujiliamparai Heist , House break-in near Kujiliamparai, £170 worth of jewelery stolen: 3 successive houses raided
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது