×

நிலக்கோட்டை அருகே 12ம் நூற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கோயில் கும்பாபிஷேக பணிக்காக தோண்டிய குழியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயில் 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த 8 மாதங்களாக பழமை மாறாமல் புதுப்பிக்கும் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பைரவர் சன்னதி பகுதியில் குழி தோண்டியபோது, சுமார் ஒன்றரை அடி உயரம், மூன்றரை அடி அகலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி பேராசிரியர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்த நந்தி சிலை உருவத்தில் சிறியதாகவும், கொம்பு கட்டையாகவும், முகம் திமில் சிறியதாகவும், ஒரு வரிசை மணி கழுத்தில் அணிந்திருப்பதால் சிற்ப வடிவமைப்பு பணியை வைத்து கணித்தால் கிபி 12, 13ம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருக்கலாம். இக்கோயிலில் பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

இதனால் பாண்டியர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இதேபோல இக்கோயிலை சுற்றி ஏராளமான பாண்டியர் கால கல்வெட்டுக்கள், சிலைகள் இருக்கலாம்’’ என்றார். கல்வெட்டுகள், சிலைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தொல்லியல்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி இக்கோயிலை ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nandi ,Nilakottai , 12th century Nandi idol found near Nilakottai
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு