×

திருப்பூரின் பிரதான ரோடுகளில் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டும் வாலிபர்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் பைக்ரேஸ் ஓட்டி சாகசம் காட்டும் புள்ளிங்கோ வாலிபர்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் பனியன் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒரு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் இருந்தால் அவர்கள் அனைவருமே ஆளுக்கொரு இரு சக்கர வாகனம் வைத்துள்ளனர். இதனால் திருப்பூரில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. வாகன பெருக்கம் அதிகரிப்பிற்கு தகுந்தவாறு சாலைகள் இன்னும் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.

இந்த சாலைகளில் தான் பனியன் நிறுவனங்களுக்கு சென்று வரும் பஸ்கள், துணிகள் ஏற்றி செல்லும் வேன்கள் உள்ளிட்டவைகள் சென்று வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாநகர சாலைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து போகிற இடம் போவதற்குள் அப்பாடா என ஆகிவிடுகிறது. இதில் சில இளைஞர்கள் தலைமுடியை மார்க்கமாக வெட்டிக்கொண்டு ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளை வாங்கி அதில் சைலன்சர், ஹாரன் உள்ளிட்டவைகளை மாற்றியமைத்து அதிக சத்தத்தை ஏற்படுத்தி செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இரு சக்கர வாகனத்தில் படுத்துக் கொண்டு செல்வது, வாகனத்தின் சீட் மீது ஏறி நின்று கொண்டு செல்வது போன்ற சாகசங்களிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுத்துகின்றனர். தினசரி, திருப்பூர் மாநகரில் மட்டும், குறைந்த பட்சம் 50 சாதாரண விபத்துகள் நடைபெறுகிறது. அதில் 1 அல்லது 2 விபத்துகளில் சிக்கி சிலர் இறந்தும் விடுகின்றனர். இது போல ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருப்பூரில் முன்பு இருந்ததை விட கார், இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம், அவிநாசி சாலையில் காலை, மாலையில் தான் வாகனங்கள் செல்லும். ஆனால், இப்போது எந்த நேரம் பார்த்தாலும் ஏதாவது வாகனங்கள் சென்று வருகிறது. வயதானவர்கள் ரோட்டின் ஓரத்தில் சென்றாலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் முருக்கி கொண்டு வலைந்து வலைந்து செல்கிறார்கள். மேலும், 4 இளைஞர்கள் சேர்ந்து கொண்டு பகல் நேரங்களிலேயே பைக் ரேஸ்சில் செல்வது போல் அதிவேகமாக செல்கிறார்கள்.

இதனால் முதியோர்கள், பெண்கள் நிதானிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி இளைஞர்கள் வாகனத்தை இயக்குகிறார்கள். அதே போல் ஆம்புலன்ஸ் சத்தம் போன்றும், பச்சைகிளி சத்தம் போன்ற ஹாரன்களை எல்லாம் பொருத்தி வாகனத்தை இயக்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனை போலீசார் கட்டுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் கூறியதாவது: போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அபராதமும் விதித்து வருகிறோம். மேலும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து வருகிறோம். ஆர்டிஓ நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். என்னதான், போலீஸ், ஆர்டிஓ நடவடிக்கை எடுத்தாலும், பொற்றோர்கள் மனது வைக்க வேண்டும். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை திருத்துவதற்கு 75 சதவீத பங்கு உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்று பெற்றோர்கள் யோசித்து செய்ய வேண்டும். போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

பார்டி ரேஸ்
திருப்பூரில் உள்ள இளம்பெண்களும் வாலிபர்களுடன் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் ஏறிக்கொண்டு ரோட்டில் செல்லும் பொழுதே முகம் சுழிக்க வைக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்கு புள்ளிங்கோஸ் மத்தியில் பார்டி ரேஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

Tags : Tirupur , Teens show adventure by racing on the main roads of Tirupur: motorists fear
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து