×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் சேதமடைந்த 362 சாலைகளுக்கு டெண்டர்: மாநகராட்சி அதிகாரி தகவல்

 சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 40 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் சேதமடைந்த 362 சாலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சென்னை முழுவதும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. பருவ மழைக்கு பின் ஜனவரி மாதத்தில் சாலை போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது. மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1,022 சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 40 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் சேதமடைந்த 362 சாலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக 107 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிதியாண்டில் சாலை பணிகளுக்கு, 125 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் போட டெண்டர் போடப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். ஏற்கனவே தொடங்கப்பட்டு மழை காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், மண்டல வாரியாக பழுதடைந்துள்ள சாலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவைப்படும் 500 கோடி ரூபாயை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.



Tags : Singara , Singhara Chennai 2.0, Damaged Road, Tender, Corporation Officer, Info
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில்...