திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு 2 முக்கிய குற்றவாளிகளுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்: விசாரணையை தொடங்கியது தனிப்படை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்த அரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை ஒரு வாரம் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி போலீசார் அவர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து அதில் இருந்த ரூ.72.79 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது.

இது தொடர்பாக, அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் (37) ஆகியோர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். பின்னர், கடந்த 18ம் தேதி திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்), குர்தீஷ் பாஷா (43), அசாம் மாநிலம் லாலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கொள்ளையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் பதுக்கி வைத்துள்ள ரூ.70 லட்சத்தை மீட்கவும் கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட் கவியரசன், கொள்ளையர் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதித்து, 28ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.  அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருந்த இருவரையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: