×

அக்கப்போர் செய்வதை விடுத்து ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்? அமைச்சர் பொன்முடி கண்டன அறிக்கை

சென்னை: அக்கப்போர் செய்வதை விடுத்து, தனக்கான வேலையை ஆளுநர் எப்போது செய்யப் போகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்திற்குப் பொதுவானவராக செயல்படாமல், ஓர் அரசியல் கட்சிப் பிரமுகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மனிதர்களைப் பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால், பணத்தால் என எந்த வகையிலும் பாகுபடுத்திப் பார்க்காமல், அவரவருக்கான உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்கிற பரந்த மானுடப் பார்வை கொண்ட பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கியவர் கார்ல் மார்கஸ். வருணபேதத்தைப் பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும் பதவிப் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல.

ஆளுநர் மாளிகையை ‘காபி ஷாப்’ போல மாற்றிக் கொண்டு, வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர்களை அழைத்து, சந்திப்புகளை நடத்துவதும் அதனை ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமே ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. ஒரு கட்சியின் சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்த கோரிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் ராஜ்பவன், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் குரலாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவின் நிலை என்ன என்பதை எப்போது வெளியிடப் போகிறது. கிடப்பில் உள்ள மற்ற மசோதாக்களை பற்றி என்ன சொல்லப் போகிறது?

 ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்குப் பரிந்துரைத்த பா.ஜ.க.வின் உள்நோக்கமிக்க அரசியல் செயல்பாடுதான் முன்னாள் ராணுவ வீரர்கள் சிலரைப் பங்கேற்கச் செய்த ஆர்ப்பாட்டமாகும். இத்தகைய அரசியல் கண்ணோட்டங்களைப் புறந்தள்ளி, சட்டரீதியான உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பார்வையுடன் பதிவுகளை இடுவது என்பது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான செயலன்றி வேறில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

 அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பதவியினை வகிக்கும்  ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்புக்குரிய மாண்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடிக் கொண்டிருப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல். தனக்கான விளம்பரத்திற்காகவும், தன்னைப் பதவியில் நியமிக்க பரித்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும் உலகத் தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும், அரசியல்வாதி போல சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக்கொண்டு, ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும். ஆளுநர் ரவி, பதவிக்கு உரிய மாண்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறுபிள்ளை போல விளையாடிக் கொண்டியிருக்கிறார்.

Tags : Minister ,Ponmudi , When will the governor do his own work instead of fighting there?: Minister Ponmudi condemns statement
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்