சேலம்: ஈரோடு கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரும், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவமுருகன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் ஆகியோரும் இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து அவரது அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து முருகானந்தம் கூறும்போது, `ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளரான எனக்கு, வேட்பாளர் யார் என்றே தெரியாது.
கட்சிக்கு தொடர்பு இல்லாதவரை வேட்பாளராக அறிவித்தனர். இதுபெரும் அதிர்ச்சியாகி விட்டது. இதனால், நான் பதவி கொடுத்த 106 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இருந்து ராஜினாமா செய்து விட்டோம். இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவை தெரிவித்து இருக்கிறோம். ஓபிஎஸ்சை சுற்றி இருக்கிறவர்கள் தான் அவரை கெடுக்கின்றனர். தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் இருக்கிறார்கள். விரைவில் ஓபிஎஸ் அணியின் கூடாரம் காலியாகும்` என்றார்.
