×

என்எல்சி ஆர்ச் கேட் பகுதியில் கிடப்பில் கிடக்கும் சாலை விரிவாக்க பணி-விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நெய்வேலி : விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் பணிக்காக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள், பொதுமக்கள் பல வருடங்களாக குடியிருந்த வீடுகள், சாலையோர கடைகள், வழிபாட்டு தலங்கள், மின்கம்பங்கள் ஆகியவயற்றை அகற்றி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் ஆற்று பாலங்கள், மேம்பால பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாலங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பாதியிலேயே பணிகள் கைவிடப்பட்டதால் சாலை  விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் அவ்வப்போது நடைபெறுகிறது. இச்சாலை வழியாக அரசு, தனியார் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகளை கனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

மேலும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின் சாதன பொருட்கள் என்எல்சி ஆர்ச் கேட் நூழைவுவாயில் வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் சாலையின் வளைவு பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது மட்டுமின்றி சில வாகனங்கள் ஆபத்தான முறையில் செல்கின்றன. இப்பணிகள் துவங்கப்பட்டு பல ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் சாலை பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

மேலும் சர்வீஸ் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, கடந்த இரண்டு மாதம் கடந்தும் சாலை பணிகள் முடியாமல் உள்ளது. சர்வீஸ் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

நான்கு வழி சாலை பணியை முழுமையாக செய்து முடிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, சாலை பணி விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் வீரவன்னியராஜா கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் மந்த கதியில் நடப்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சாலை பணிகள் ஆங்காங்கே நிறைவு பெறாமல் உள்ளதால், வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பண்ருட்டி முதல் வடலூர் வரை உள்ள சாலைகளை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும், என்றார்.

Tags : NLC ,Arch Gate , Neyveli: Vikravandi-Thanjavur National Highway expansion project was announced and funds were allocated in 2018.
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...