மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் திருப்பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்  ஆய்வு மேற்கொண்டார். அம்மனை தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கோயில் வளாகம்,  பக்தர்கள் பொங்கலிடும் பகுதி, சமய மாநாடு திடல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். பின்னர் அங்கிருந்து குமாரகோயில் சென்றார். அங்கு கோயில் சார்பில் உள்ள திருமணங்கள் நடைபெறும் மண்டப பகுதிகளை ஆய்வு செய்தார்.

அமைச்சருடன் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை  ஆணையர் ஞானசேகர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மேலாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர்  ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.  பின்னர் நாகர்கோவில் வந்த அமைச்சர் சேகர் பாபு அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது :

குமரி மாவட்ட திருக்கோயில்களுக்காக தமிழக அரசு  ₹3 கோடி அளவிற்கு வழங்கிக் கொண்டு இருக்கிறது.  இந்த தொகை மூலம் திருக்கோயில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், தினசரி பூஜைகள் நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற உடன் முதலமைச்சர்  மேலும் ₹3 கோடி சேர்த்து மானியமாக வழங்கி திருக்கோயில் பணியாளர்களையும், பூஜைகள் நடைபெறாத கோயில்களில் பூஜைகள் நடைபெறுவதற்கும், விளக்கேற்ற வசதியில்லாத கோயில்களில் விளக்கொளி வீசவும் உத்தரவிட்டார்.

 100 ஆண்டுகள் கடந்த பழமையான திருக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 லட்சம் என்று ஒதுக்கீடு செய்து 100 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்ய ரூ.15 கோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்  78 திருக்கோயில்களுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 திருக்கோயில்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

400 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்  திருப்பணிகளை நிறைவேற்றி கும்பாபிஷேகம் நடத்திய பெருமை தமிழ்நாடு முதலமைச்சரை சாரும்.  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்க ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 24, 25, 26  ஆகிய மூன்று தேதியில் ஒரு நாள் அந்த திருப்பணியும் நிறைவுற்று முழுமையாக அந்த திருக்கோயில் புனரமைக்கப்படும்.

இந்த  அரசு பொறுப்பேற்ற பிறகு 21 மாத  காலத்தில் 510 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் 510 திருக்கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதுதான் முதல் முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருக்கோயில்களுக்கு அரசின் சார்பில் ரூ.100 கோடி மானியம் ஒதுக்கப்பட்டு 112 திருக்கோயில்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்து 109 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கியவர் தமிழ்நாடு முதல்வர். 12 ஆயிரத்து 597 திருக்கோயில்களுடன் நின்றுவிடாமல் ஆட்சி பொறுப்பேற்ற உடன் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்களை ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் எடுத்து அதற்கும் ரூ.40 கோடி அரசு மானியமாக வழங்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சரை சாரும்.

எங்கெல்லாம் பழமை வாய்ந்த திருக்கோயில்கள் புனரமைக்க வேண்டிய பணிகள் இருக்கின்றதோ, அவற்றை சைவ, வைஷ்ணவ கோயில்களை புனரமைக்க முழுவதுமாக இந்து சமய அறநிலையத்துறை தன்னை ஆட்படுத்திக்கொண்டு இருக்கின்றது. இதற்கு தேவையான நிதி திருக்கோயில்களில் இல்லை என்றாலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் முதலமைச்சர் தேவையான நிதியை அரசு மானியமாக வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: