×

நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் தடுப்புகள் அகற்றம் மைய மின் விளக்குகளால் விபத்து அபாயம்

நெல்லை : நெல்லை டவுன் ஆர்ச் மேம்பாலம் வரையிலான சாலை அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடைபெறும் நிலையில் இந்த சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டதால் மின்விளக்குகள் மட்டும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. நெல்லை டவுன் ஆர்ச் முதல் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் வரை உள்ள நெல்லையப்பர் நெடுஞ்சாலை நீண்ட காலமாக பழுதாகி இருந்தது. மழை நேரங்களில் சாலையில் நீர் அதிகளவில் தேங்கியது. மேலும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் ஆழமான குழி தோண்டி மெகா சைஸ் குழாய்கள் பதிக்கப்பட்டன.

இதன் காரணமாகவும் பள்ளங்கள் ஏற்பட்டன. இப்பகுதியில் மழை காலத்தில் சேறும் சகதியுமாகவும், மற்ற நாட்களில் வாகனங்கள் செல்லும் போது தூசிபறப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும் சாலையின் இரு ஓரங்களிலும் அறிவிக்கப்படாத கார், இருச்சக்கர பார்க்கிங் ஆக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பிரதான சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது.
 இந்த குறைகளை நீக்குவதற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பெரிய அளவிலான கான்கிரீட் கழிவு நீரோடை மற்றும் சாலை விரிவாக்கம் செய்து தரமாக அமைப்பது போன்ற பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டன.

மேலும் சாலையின் மையப்பகுதியில் நவீன சென்டர் மீடியன் வைத்து அதில் மினிகார்டன் போல் வைக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த ப்பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடக்கின்றன. இந்தப்பகுதி சாலை மட்டும் ஓரளவு போடப்பட்டுள்ளது. கான்கிரீட் பணி முழுமையாக முடிந்ததாக தெரியவில்லை சாலையின் மைப்பகுதியில் இருந்த சென்டர் மீடியன் சிமென்ட் மற்றும் இரும்பு தடுப்புகள் உடைத்து அகற்றப்பட்ட பின்னர் தற்போது மையப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்ட நவீன உயரமான மின்விளக்குகள் மட்டும் நின்று ஒளிர்கின்றன.

சென்டர் மீடியன் இடையே  பாதுகாப்பாக இருந்த நிலையில் தற்போது சாலையின் மைப்பகுதிகளில் எந்த தடுப்பு பாதுகாப்பும் இல்லாமல் நிற்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் இந்த மின்னொளி கம்பங்களில் மோதி விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் சென்டர் மீடியன் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இது போன்ற மின்னொளி கம்பத்தில் பஸ் ஒன்று மோதி சரிந்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சென்ற வாலிபர் பலியானார்.

தற்போது சென்டர் மீடியனும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மின்னொளி கம்பங்களில் பாதுகாப்பு வசதிகள் அமைப்பது அவசியம். சாலை மற்றும் ஓடை அமைக்கும் பணிகளை இனியும் தாமதிக்காமல் துரிதப்படுத்தி சென்டர் மீடியன்களையும் அமைக்க வேண்டும் என  வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Nelliyapar Highway , Nellai: The construction of the road up to the Nellai town arch flyover is going on at a snail's pace.
× RELATED விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள்...