சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 91 பேர், தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்வாகியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24 முதல் 26ம்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 12 பேர், வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 1230 பேர் ஓட்டுப்போட தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதனடிப்படையில், அகில இந்திய காங்கிஸ் கட்சி சார்பில், மாநில வாரியாக அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 91 அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நியமன அடிப்படையிலான 25 பேர் பட்டியல் என மொத்தம் 116 உறுப்பினர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில், அவரவர் வகிக்கும் எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகள் அடிப்படையில் 46 பேர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதியுள்ள 45 உறுப்பினர்கள் பதவிகளுக்கு, கட்சியில் மாநில அளவில் முக்கிய பதவிகளில் உள்ள துணைத் தலைவர்களான ஆ.கோபண்ணா, நாசே ஜெ.ராமச்சந்திரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், முன்னாள் எம்பி விஸ்வநாதன், சுமதி அன்பரசு, எம்.பி.ரஞ்சன் குமார், செங்கம் குமார் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது, 25 நியமன உறுப்பினர்கள் பட்டியலையும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. இதில், எஸ்.எஸ்.ராமசுப்பு, நவீன், அஸ்லம் பாஷா, டீக்காராமன், தளபதி பாஸ்கர், கார்த்திக் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
*7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர் குழு ராய்ப்பூரில் நடைபெறும் 3 நாள் மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு உதவ, தமிழக காங்கிரஸ் சார்பில் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர்களை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இந்த குழுவில், கே.சிரஞ்சீவி, கோபி, பவன் குமார், டீக்காராமன், முனீஸ்வர கணேசன், நிசார் அகமது, விஜய் சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
