×

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் வண்ணம் பூசக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துகளை தடுக்க அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூச உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் தெளிவாக தெரியாததால் அதிக விபத்துகள் நடக்கிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நகர்மயமாக்கல், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், கால்நடைகள் உணவுக்காக தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும், பசு, எருமை மற்றும் நாய்களால் ஏற்பட்ட விபத்துகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகியுள்ளனர். இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகள் தெளிவாக பார்க்க முடியாத காரணத்தால் அதிக விபத்துகள் நடக்கிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஆந்திரா, தெலங்கானாவில், நாய்கள், கால்நடைகளுக்கு பிரதிபலிக்கும் டேப்கள் பொருத்தப்படுகிறது.

தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு சிவப்பு நிற பட்டைகளை பொருத்தும்படியும், கொம்புகளில் சிவப்பு நிற பிரதிபலிப்பு பெயின்ட் பூச உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். சாலைகளில் திரியும் விலங்குகளின் உரிமையாளருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, தமிழக உள்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாக துறைகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Tags : Tamil Nadu govt , HC directs Tamil Nadu govt to paint horns of cows roaming on highways
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...