×

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.1.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட மனோராவில் குவியும் சுற்றுலா பயணிகள்

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோராவில் கடலில் படகு சவாரி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ளது மனோரா நினைவு சின்னம். 1814ல் வாட்டர்லூ கடல்போரில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் அறுகோன வடிவில் கட்டப்பட்ட கோபுரம் மனோரா. இதன் படிக்கட்டுகள் வழியாக சுமார் 75, அடி உயரமுள்ள உச்சியில் ஏறி பார்த்தால் கடல் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்திலும், பேராவூரணியிலிருந்து 12 கிமீ தூரத்திலும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சிறப்பான இந்த சுற்றுலாதலம் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது சேதமடைந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. மனோரா சுற்றுலாத் தளத்தை மேம்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெரும்முயற்சியால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது,ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகுக்குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக் கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் என ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடலில் படகுசவாரி, சிறுவர் பூங்கா என மனோரா சுற்றுலாதளம் களைகட்டி வருகிறது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியது:தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் கண்டு இன்புறும் வகையில் கலெக்டரின் தீவிர முயற்சியால் மனோரா மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

Tags : Manora ,Sethubavasthram , Peravoorani : Thanjavur district near Setupavasatram in Manora will attract tourists with boat rides and children's park in the sea.
× RELATED மல்லிப்பட்டினம் துறைமுகத்தில்...