×

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

 

தஞ்சாவூர், பிப்.16: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.65 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. அப்போது இந்த துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தன. புதிதாக கட்டப்பட்ட துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்கும் வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறார்கள். ஆனாலும் பலனில்லை. தூண்டில் வளைவு இல்லாததால் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் வீசியபோது இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுக்கு நூறாக உடைந்தன. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு தற்போது துறைமுகத்தில் இருந்து 100க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன.

அதேசமயம் எதிர்காலங்களில் பருவமழை தாக்கம் அதிகமாகவோ, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளாலோ படகுகளுக்கு மீண்டும் சேதம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே படகுகளை பாதுகாக்கும் வகையில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mallipattanam ,Thanjavur ,Sethubavasthram ,Mallipattanam port ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...