×

சின்னசேலம் அருகே கீழ்குப்பம் பகுதியில் தென்னை மரங்களில் கள் இறக்க கட்டப்பட்டிருந்த பானைகளை அதிரடியாக அகற்றிய போலீசார்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கீழ்குப்பம் காவல் நிலைய பகுதியில் கள் இறக்குவதாக தினகரனில் செய்தி வெளியானதால் எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக பானைகளை உடைத்தனர். சின்னசேலம் காவல் எல்லைக்கு உட்பட்ட வீ.அலம்பளம், பெத்தாசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் பதநீர் என்ற பெயரில் போதை தரும் கள் இறக்கப்பட்டு வருகிறது. போதை பவுடர் கலந்த இந்த கள்ளை குடிக்கும் இளைஞர்கள் வாழ்க்கையில் பாதை மாறுகின்றனர். இதேபோல தோட்டப்பாடி கிராம எல்லைக்கு உட்பட்ட ஏரிக்கரையில் கள் இறக்குவதை தெரிந்த மாணவர்கள் வாங்கி குடித்து விட்டு மட்டையாகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் உடனடியாக அவைகளை அழித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீ.அலம்பளம் கிராமத்தில் போலீசாருக்கும் தெரிந்தும் தென்னை மரத்தில் கள் இறக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் பீட்டர் மாமா பகுதியில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கீழ்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் ராமதாஸ், ஆதிமூலம் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை வீ.அலம்பளம் கிராமத்துக்கு சென்று தென்னை மரங்களில் கள் இறக்க கட்டியிருந்த பாணைகளை ஏணி வைத்து ஏறி தடியால் உடைத்தெறிந்தனர். மேலும் இனிமேல் பதநீர் என்ற பெயரில் கள் இறக்க தென்னை மரங்களை விடுபவர்கள் மீதும், கள் இறக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.


Tags : Chinnaselam , Chinnasalem: As news broke in Dhinakaran that people were being dumped in Kilikuppam police station area near Chinnasalem, S.B. of order
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்...