சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்த உத்தவ் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்த உத்தவ் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணி என்றும், ஏக்நாத் ஷிண்டே அணி என்றும் பிரிந்த போது, இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறின. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் இடையே தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் எனவே கட்சி சின்னமான வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தது.

இதனை எதிர்த்து உத்தவ் அணி மனு தாக்கல் செய்தது. இது பற்றி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷனுக்கு முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் உத்தவ் தாக்கரே அணிகள் வில் அம்பு சின்னம் கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவித்தோடு, சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் அந்த அணிக்கே வழங்கியது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தேர்தல் கமிஷனின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிட்டார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Related Stories: