×

விமான நிலையம் வர தாமதமானதால் வெடிகுண்டு புரளி விடுத்த ஐதராபாத் பயணி கைது

மீனம்பாக்கம்: விமான நிலையத்துக்கு வர தாமதமானதால் வெடிகுண்டு இருப்பதாக, புரளியை கிளப்பிய பயணியை போலீசார் கைது செய்தனர். சென்னைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு  ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 118 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏறிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திடீரென ஒரு போன் அழைப்பு வந்தது. ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 10.15 மணிக்கு செல்ல இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், விரைந்துவந்து விமானத்தை சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இந்நிலையில் ஐதராபாத் விமான நிலைய போலீசார், எந்த நம்பரிலிருந்து, இந்த போன் கால் வந்தது என்று ஆய்வு செய்தபோது, ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பர் பதிவாகி இருந்தது. அது சென்னையைச் சேர்ந்த பத்திரையா என்பவரின் செல்போன் எண் என்று தெரியவந்தது. இதையடுத்து செல்போன் டவரை ஆய்வு செய்தபோது, செல்போன் டவர் ஐதராபாத் விமான நிலையத்தை காட்டியது. உடனடியாக சுறுசுறுப்படைந்த போலீசார், அதே விமான நிலையத்தில், விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த பத்திரையாவை சுற்றிவளைத்தனர்.

விசாரணையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பத்திரையா என்பதும், இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி சென்னையில் பணியாற்றி வருகிறார். சனி, ஞாயிறு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பத்திரையா, நேற்று இந்த விமானத்தில் சென்னை திரும்பிச் செல்ல இருந்தார். ஆனால் இவர் விமான நிலையம் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. எனவே இதுபோன்ற ஒரு தவறான புரளியை கிளப்பிவிட்டு, விமானம் தாமதமானால், சென்று விமானத்தில் ஏறிவிடலாம் என்ற நோக்கத்தில் பத்திரையா, இவ்வாறு கூறியது தெரியவந்தது. இதையடுத்து  ஐதராபாத் போலீசார், பத்திரையாவை கைது செய்தனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு அந்த விமானம் 117 பயணிகளுடன் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.

Tags : Hyderabad , Hyderabad passenger arrested for making bomb hoax due to airport delay
× RELATED டேட்டிங் ஆப் மூலம் மோசடி; 7 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு!