×

குடிநீர் லாரியை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்: மணலியில் பரபரப்பு

திருவெற்றியூர்: மணலியில் குடிநீர் லாரியை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலி மண்டலம் 16வது வார்டு சடையன் குப்பத்தில் குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக குடிநீர் வரவில்லை. அதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பணம் கொடுத்து கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, குடிநீர் குழாயை சரி செய்து தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சடையன் குப்பத்தில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

அந்த குடிநீர் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் இன்று காலையில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்ய மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரியத்தின் குடிநீர் ஒப்பந்த லாரி சடையன்குப்பம் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த பெண்கள் குழாய்களில் குடிநீரை விநியோகிக்க கோரி காலி குடங்களுடன் குடிநீர் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து லாரியை விடுவிக்க போராட்டக்காரரிடம் கூறினர். அப்போது, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் இங்கே வர வேண்டும், பழுதடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்தால்தான் லாரியை விடுவிப்போம்’ என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manali , Women protest with empty jugs by imprisoning the drinking water lorry: stir in Manali
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்