×

பெரிய ஓபுளாபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் உலவும் விஷப்பூச்சிகள்: குழந்தைகள் அச்சம்

கும்மிடிப்பூண்டி: பெரிய ஓபுளாபுரம் காலனி பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்துக்குள் விஷப்பூச்சிகள் உலவி வருவதால், அங்கு படிக்க வரும் குழந்தைகள் விஷப் பூச்சிகள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அந்த மையத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள பெரிய ஓபுளாபுரம் காலனியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பெரிய காலனி, ஈச்சங்கமேடு, நாகராஜ் கண்டிகை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் வெட்டவெளியில் இருப்பதால், அதன் அருகே வயல்வெளிகளில் இருந்து பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகள் உலவி வருகின்றன. இதனால் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டவெளியில் இருந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் ரூ.4.75 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.

எனினும், இந்த மையத்தை சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் வளர்ந்து, விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இங்கு குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, முறையான பராமரிப்பின்றி இருக்கும் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் உள்ள முட்புதர் காடுகளை அகற்றி, குழந்தைகளின் அச்சத்தை போக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Anganwadi ,Greater Opulapuram , Venomous insects swarm Anganwadi center in Greater Opulapuram: Children fear
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...