×

இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்ற திருவிழா: ஒருவர் மீது ஒருவர் ஆரஞ்சு பழத்தை வீசி கொண்டாட்டம்

இத்தாலி: இத்தாலியில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் ஆரஞ்சு பழத்தை வீசி விளையாடினர். இத்தாலியில் திருவிழா காலம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அயிரேலியா பகுதியில் நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி 2 அணிகளாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் ஆரஞ்சு பழங்களை வீசினர். ஒரு குழு குதிரை மீதும், மற்றவர்கள் கீழே நின்றும் பங்கேற்றனர். கிபி 1100 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலத்தில் இருந்து இந்த திருவிழா நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அந்த காலகட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏழை பெண் வியூலெட்டாவை அவரது திருமணநாளின் போது அரச குடும்பத்தை சேர்ந்த நபர் தூக்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வியூலெட்டா, அந்த நபரின் தலையை துண்டித்து அந்த நகர மக்களுக்கு சுதந்திரம் பெற்று தந்தார் என்றும் அதன் நினைவாக இந்த ஆரஞ்சு பழ திருவிழா நடைபெற்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விழாவில் பங்கேற்ற பெண்மணி ஒருவர் கூறுகையில், குதிரைகள் செல்லும் சத்தத்தை கேட்பதே மகிழ்ச்சியாக உள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல் உள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு எங்களுக்கு இப்போது தான் கிறிஸ்துமஸ் வந்துள்ளது. எனவே இதனை நாங்கள் உற்சாகமாக கொண்டாடுகிறோம் என்று கூறினார். திருவிழா தொடங்கிய சில நிமிடங்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் கொரோனாவுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் பலர் இதில் ஆர்வமாக கலந்துக்கொண்டு கொண்டாடினர். 2ம் உலகப்போருக்கு பிறகு இந்த திருவிழா சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Italy , Italy, festival, orange fruit, celebration
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்