சித்தூரில் மயான கொள்ளை விழா கோலாகலம் பூதவாகனத்தில் அங்காளம்மன் வீதி உலா-அம்மனுக்கு கொள்ளை விட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

சித்தூர் :  சித்தூர் மாவட்டத்தில் மயான கொள்ளை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பூத வாகனத்தில் அங்காளம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் அம்மனுக்கு கொள்ளைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்தூரில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மறுநாள் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மயான கொள்ளை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி சித்தூர் நீவா நதி கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தக்‌ஷனை வதம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சித்தூர் மாநகரத்தில் குர்ரப்ப நாயுடு தெருவில் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 190வது ஆண்டு மயான கொள்ளை திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம், குங்கும அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி பஜார் தெரு, காந்தி ரோடு, சந்தப்பேட்டை ரோடு உள்ளிட்ட வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக நீவா நதி கரையை அடைந்தார் பின்னர் அங்கு தக்ஷனனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

 இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா கே.எம்.குமார் கூறுகையில், இக்கோயிலில் வழங்கப்படும் தீர்த்தம் பருகினால் நோய் நொடியின்றி இருப்பார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குறைகளை அம்மனிடம் முறையிட்டு வேண்டுதலை நிறைவேற்றி செல்கிறார்கள். அதேபோல் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மோர் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மயான கொள்ளை வரலாறு தட்சன் முக்கோடி தேவர்களை அழைத்து மகா யாகம் செய்தார். அப்போது தக்‌ஷனின் மகள் பார்வதி தேவி தனது கணவர் ஈசனை எதற்காக நீ மகா யாகத்திற்கு அழைக்கவில்லை என கேட்டார். இதற்கு பார்வதியின் தந்தை தக்‌ஷன் ஈசன் சுடுகாட்டில் பிணங்களை தின்று குடும்பம் நடத்தி வருகிறான். அவனை மகா யாகத்திற்கு நான் அழைக்க மாட்டேன் என தெரிவித்தார். இதை அறிந்த ஈசன் தன்னை அவமதித்ததாக கருதி தட்சணனை பூத வேடத்தில் வதம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மறுநாள் தக்‌ஷனை வதம் செய்யும் தினத்தை மயான கொள்ளை திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 இதில் கோயில் பிரதான அர்ச்சகர் குமார் மற்றும் கோயில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நீவா நதிக்கரையில் நடைபெற்ற தக்‌ஷனை வாதம் செய்யும் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமானோர் கொள்ளைவிடப்பட்ட கொழுக்கட்டை, சுண்டல், அம்மனின் கலி மண் உள்ளிட்டவை எடுத்துச் சென்று வணங்கினர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் காளி, பத்திரகாளி, அங்காள பரமேஸ்வரி மற்றும் காட்டேரி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து தங்களின் நேர்த்தி கடனை  செலுத்திக் கொண்டனர். சித்தூர் நீவா நதிக்கரையில் நடந்த மயான கொள்ளையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் காவல்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

Related Stories: