×

வார விடுமுறையையொட்டி வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்-உல்லாச ரயில், படகு குழாமில் சிறுவர்கள் ‘குஷி’

ஆண்டிபட்டி : வார விடுமுறையையொட்டி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.தென்தமிழக மக்களுக்கு பிடித்த சுற்றுலாத் தலமான ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். தொடர் பணிச்சுமை காரணமாக மக்கள் பலரும் வார இறுதி நாளில் ஓய்வெடுப்பதற்காகவும், மனஇறுக்கத்தை குறைப்பதறகாகவும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றாலும் குழந்தைகள் விளையாடுவதற்கு தகுந்த இடத்திற்கு சென்று மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சாமானி மக்களும் சென்று ஓய்வெடுத்து, குழந்தைகளை விளையாட வைப்பதற்காக தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா விளங்கி வருகிறது. இந்த வைகை அணை பூங்காவில் நுழைவதற்கு 5 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனல் மக்கள் பலரும் குறைந்த செலவில் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த பூங்காவில் வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை இரண்டு பூங்காவை பிரிப்பதற்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்து அணையின் மதகு பகுதியை நேருக்கு நேராக பார்க்கும் காட்சி இங்கு அமைந்துள்ளது. சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, பையில்வான் பார்க், காந்தி பார்க், யானை சறுக்கல், ஆங்காங்கே நீருற்று, புல் தரைகள், ஓய்வெடுக்கும் இறுக்கைகள், வைகை உல்லாச ரயில், இசை நடன நீருற்று, படகு குழாம் உள்ளிட்ட ஏரளாமான சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு வைகை அணை பூங்கா பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து மாசி பச்சை விழாவில் அனைவரும் குல தெய்வ வழிபாடு முடிந்து வைகை அணை பூங்காவில் சுற்றிபார்த்து விட்டு செல்வதால் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

அங்குள்ள உல்லாச ரயில் பெரியவருக்கு ரூ 6ம், சிறியவர்க்கு ரூ3ம், வசூலிக்கப்படுகிறது. இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக உல்லாச ரயில் இயங்காமலும், இசை நடன நீருற்று செயல்படாமலும், படகு குழாம் நடைமுறைக்கு வராமலும் இருந்தது. இதனால் பூங்கா பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். ஆனால் தற்போது அனைத்தும் செயல்பட்டு கொண்டிருப்பதால் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

Tags : Vaigai Dam Park , Andipatti: On the occasion of the weekend, the Vaigai Dam Park near Andipatti was crowded with tourists yesterday
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு