×

கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஆண்டிபட்டி: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணைப் பகுதியில் பூங்காவும் உள்ளது. இந்த பூங்கா தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சபரிமலை, பழனி முருகன் கோவில் சீசன்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். பூங்காவில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்துவந்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வார்கள். வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது. இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. படகு பயண வசதியும் உள்ளது.

இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஓரளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வைகை அணை பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து வெயில் அதிகரித்தே இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர். பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதால் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் கடைகளில் போதிய வியாபாரம் இல்லாமல் உள்ளன.

The post கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Andipatti ,Vaigai Dam Park ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்