×

4560 அடி உயரமுள்ள பருவத மலை கோயில் உள்பட சிவாலயங்களில் சிவராத்திரி விழா கோலாகலம்: லிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், 4560 அடி உயரமுள்ள பருவத மலை உள்பட சிவாலயங்களில் சிவராத்திரி வழிபாடு நடந்தது. விடிய விடிய பக்தர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கண்விழித்தனர். சிவபெருமான் திருவண்ணாமலை வர பூலோகம் வருகையில் தன் பாதத்தை முதலில் பருவதமலையில் பதிக்கிறார் என்றும் பிறகு அண்ணாமலையார் பாதம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாதத்தை வணங்கிட்டுதான் பக்தர்கள் மலையேறி உச்சியில் கோயில் கொண்டுள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர்-  பிரம்மராம்பிகை அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பருவதமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். சிவராத்திரி தினத்தன்று தரிசனம் செய்தால் கொடூர எண்ணங்கள் அகன்று நற்குணங்கள் ஏற்படும் தீராத நோய்கள் விலகும், புத்திர பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும், கடன் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 அதேபோல் சனிக்கிழமை பருவத மலையை கிரிவலம் வந்து மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தால் மூன்று லோகங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கலசப்பாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கடலாடி பட்டியந்தல் வேடப்புலி வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் கிரிவலம் வந்து மலையாளிச்சென்று பக்தர்கள் கொண்டு சென்ற அபிஷேக பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

 மலையேறும் பக்தர்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்கிட மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் சக்தி கயிறு வழங்கப்பட்டது. மேலும் நேற்று பிரதோஷம் என்பதால் நந்தி வடிவமான பருவத மலையில் பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க செங்குத்தான கடப்பாரை படி ஏறி செல்லும்போது ‘அரோகரா அரோகரா’, ‘ஓம் நமச்சிவாய’ என எழுப்பிய கோஷம் பருவத மலையை உலுக்கியது. நட்சத்திர விநாயகர் கோயில்: செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்ட அத்தி விருட்சம் ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கு நேற்று மகா சிவராத்திரியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட நபர்களுக்கு பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்படுகிறது.

சனி பிரதோஷ வழிபாடு: கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மகாசிவராத்திரி விழா மற்றும் சனி மகாபிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு காலை 6 மணிக்குருத்ர ஹோமம் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு லிங்க வடிவான ஈஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் சந்தனம் உள்பட திரவியங்களால் அபிஷேகம்  நடைபெற்றது. பின்னர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு கோயிலை ஒட்டியுள்ள மீனாட்சி அம்மன், நவக்கிரக கோயில் மற்றும் நந்திக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் சந்தனம் உள்பட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து சிவன் கோவிலில் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவு 8மணிக்கு முதல்கால பூஜை, இரவு 11மணிக்கு இரண்டாம்கால பூஜை, இரவு 2மணிக்கு மூன்றாம்கால பூஜை மற்றும் காலை 4.30மணிக்கு நான்காம்கால பூஜையுடன் நிறைவுபெற்றது. இதில் இரவு முழுவதும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முதலுதவி சிகிச்சை மையங்கள் தேவை
பருவத மலைக்கு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பவுர்ணமி தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிக அளவில் உள்ளன. பக்தர்களின் நலன் கருதி மலை அடிவாரம், பாதி மண்டபம், கடப்பாரை படி சன்னிதானம் ஆகிய இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மலையேறும் பக்தர்களின் வசதிக்காக தற்போது மாற்றுப்பாதை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் பாதி மண்டபத்தில் இருந்து மலை உச்சி வரை குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் எ.வ.வேலு சேகர்பாபு ஆகியோரிடம் தொடர்ந்து எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வலியுறுத்தி வருகிறார். திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்த போது பருவதமலைக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே மீண்டும் திமுக ஆட்சியில் குடிநீர் வசதி மற்றும் முதல் உதவி சிகிச்சை மையங்கள் அமைத்து தர பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Lingothpavar ,Seasonal Mountain Temple , Barudha Hill Temple, Shivratri Festival Kolakalam in Shivalayams, Special Pooja to Lingot Power
× RELATED காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு: 30 பேருக்கு காவல்துறை சம்மன்