×

ஆனைமலை காப்பகத்தில் கணக்கெடுத்த புலிகள் விவரம் விரைவில் வெளியீடு: வனத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி: ஆனைமலை காப்பகத்தில் கணக்கெடுக்கப்பட்ட புலிகள், பிற விலங்குகளின்  எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, வரையாடு, மான், கடமான், சிங்கவால் குரங்கு, காட்டுபன்றி, மலைபாம்பு, காட்டுக்கோழி உள்பட பல விலங்குகள் உள்ளன.

மொத்தம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை என இரண்டு கோட்டங்களாக செயல்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 4 சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 நாட்கள் நடந்தது. மொத்தம் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பொள்ளாச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து, விலங்குகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இதில் பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடம் பதிந்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் சிங்கவால் குரங்கு, வரையாடு, யானை, கட்டெருமைகளை நேரடியாக பார்த்தும் கணக்கெடுத்தனர். சேத்துடை அடுத்த போத்தைமடை, டாப்சிலிப் பகுதிகளில் புலியின் கால்தடம் பதிவாகியிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட புலிகளின் தடம் மற்றும் பிற விலங்குகளின் தடத்தின் மூலம் எண்ணிக்கை அறியப்படுகிறது.இதையடுத்து, பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் எத்தனை புலிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, புலிகள் எண்ணிக்கை குறித்து வனத்துறையினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. பல இடங்களில் புலியின் கால்தடம் பதிந்திருந்தது. ஏற்கனவே, டாப்சிலிப் மற்றும் வால்பாறை பகுதிகளில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தாலும், தற்போது, மானாம்பள்ளி  வனசரகத்திற்கு உட்பட்ட சில இடங்களிலும் புலிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி (டாப்சிலிப்), மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பில் புலிகளின் கால்தட பதிவு, எச்சம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டது.  இதனுடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்ட பகுதியில் உள்ள வனச்சரகங்களில் நடந்த கணக்கெடுப்பில் எத்தனை புலிகள் உள்ளன என்பதும் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எவ்வளவு உள்ளது என்ற எண்ணிக்கை சேகரிப்பட்டு வருகிறது.

அண்மையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் எத்ததனை என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனத்தில், புலிகள் மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்து விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Animalayan , Anaimalai Reserve, tiger profile, forest department information
× RELATED ஆனைமலை பகுதியில் குறுகலான சாலை...