×

கர்நாடக வனத்துறை சுட்டுக் கொலை சேலம் மீனவர் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது: குண்டு பாயவில்லை என தகவலால் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த  கோவிந்தப்பாடி காரைக்காட்டை சேர்ந்தவர் காரவடையான் (எ) ராஜா (39). மீனவரான  இவர், கடந்த 14ம் தேதி இரவு 2 நண்பர்களுடன், மேட்டூர்  பாலாறு வனப்பகுதியில்,  பரிசலில் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது,  கர்நாடக வனத்துறையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், ராஜா பலியானார். நேற்று முன்தினம்,  ஈரோடு வனப்பகுதி சென்னம்பட்டிக்கு உட்பட்ட சொரிப்பாறை ஆற்றுப்பகுதியில், ராஜாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பதற்றம் காரணமாக, பாலாறு வனப்பகுதியில் உள்ள கர்நாடக வனத்துறை  சோதனைச்சாவடியில், கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல  காரைக்காட்டிலும்,  கோவிந்தபாடியிலும், 100க்கும் அதிகமான தமிழக போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி சிவக்குமார், மேட்டூரில் முகாமிட்டு  தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். அதிர்ச்சி தகவல்: மீனவர் ராஜாவின் உடல் முழுவதும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை பிரேத பரிசோதனை நடந்தது.

பின்னர் வெளியே வந்த வக்கீல் பிரபாகரன் கூறுகையில், உடலில் குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் இல்லை. உடலில் குண்டும் இல்லை என்றார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ராஜா இறந்ததாக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா வனத்துறை சார்பிலும், தாங்கள் சுட்டது உண்மை என கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எதனை மறைக்க முயற்சி நடக்கிறது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், பிரேத பரிசோதனை தொடர்பான முழு அறிக்கை வந்த பின்னரே, ராஜாவின் உடலை பெறுவோம் என கூறி, உடலை வாங்காமல் புறப்பட்டுச் சென்றனர். மகாசிவராத்திரியை  ஒட்டி மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை  செல்லும் பக்தர்கள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பஸ்களை, கொளத்தூர் நான்கு  சாலையில் நிறுத்தி, ஐந்து, ஐந்து பஸ்களாக போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக எல்லை  வரை விடப்பட்டன.

Tags : Salem Fisherman ,Karnataka Forest Department , Salem Fisherman shot dead by Karnataka Forest Department Post-mortem completed: Relatives refuse to buy dead body on information that there was no bullet
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...