×

விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி தஞ்சையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

*வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கல்

தஞ்சாவூர் : தஞ்சையில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ஜெய்ஹிந்த் நரேந்திர சமாஜம் டிரஸ்ட் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தின விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ஜெய்ஹிந்த் நரேந்திர சமாஜம் டிரஸ்ட் சார்பில் சமூக மேம்பாடு, போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, மாணவர்களுக்கான கல்வி, தொழில் கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஜெய்ஹிந்த் நரேந்திர சமாஜம் டிரஸ்ட் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் பாலு தயாநிதி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் முன்னிலை வகித்தார்.

இதில், ஏராளமான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை தஞ்சை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், மஹாராஜா சில்க்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆண்கள் பிரிவில் விளையாட்டு மைதானத்திலிருந்து மருத்துவக்கல்லூரி கேட் வழியாக சென்று மீண்டும் மைதானம் வரையும், பெண்களுக்கு விளையாட்டு மைதானத்திலிருந்து நவபாரத் பள்ளி வரை சென்று மீண்டும் மைதானம் வரை நடத்தப்பட்டது.

போட்டியின் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000ம், தலா 7 பேருக்கு ரூ.1,000ம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விவேகானந்தர் சேவா சமதி ஸ்ரீரங்கம் ராஜாராமன், ஐ.ஓ.பி சுவாமிநாதன், முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் காந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட தனியார் கல்வி அலுவலர் செந்தில், தடகள சங்க செயலாளர் பிரபு, தொழிலதிபர்கள் சுந்தர்நாராயணன், சதீஷ் ஆனந்த், சேவா பாரதி மாநில செயலாளர் கேசவன், விளையாட்டு பயிற்சியாளர் முரளிதரன், குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் பாரத சிற்பி லயன்ஸ் பிரனேஷ் இன்பென்ட்ராஜ்க்கு இளைஞருக்கான சேவை விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஜெய்ஹிந்த் நரேந்திர சமாஜம் டிரஸ்ட் பொதுச் செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் மாரத்தான் போட்டியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அரசு அலுவலர்கள், காவல்துறையினர்,விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜெய்ஹிந்த் நரேந்திர சமாஜம் டிரஸ்ட் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : Thanjavur ,Swami Vivekananda ,Jai Hind Narendra Samajam Trust ,National Youth Day ,Thanjavur… ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...