×

விழுப்புரம் அருகே கேரளாவை சேர்ந்தவர் நடத்திய ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 15 பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் விசாரணை நடத்தினார்.  இதில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி  அருகே  குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமத்தை கேரளாவை சேர்ந்த ஜூபின்பேபி என்பவர் நடத்தி வந்தார்.

ஆசிரமத்தில் இருந்து 11 பேர் மாயம், பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு  சர்ச்சையான புகார்களை தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் அரசுத்துறை  அதிகாரிகள்  மற்றும் கெடார் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கொல்கத்தாவை  சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும், அவரது தோழி  ஒருவரும் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்ட புகாரில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9  பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆசிரமத்தில் பயன்படுத்தப்பட்ட  மருந்துகள், மாத்திரைகள், ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். விழுப்புரம் மண்டல மருந்து  கட்டுப்பாட்டுத்துறை முதுநிலை  ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா, சுகன்யா  ஆகியோர்  மருந்துகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.  மேலும் ஆசிரம  ஆவணங்கள் அனைத்தையும் சரி பார்த்தனர்.

இதற்கிடையே ஆசிரமத்தில் நடந்த  பாலியல் அத்துமீறல் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து தினமும் பல்வேறு  புகார்கள், குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.  ஆசிரம நிர்வாகத்தின் மீது தொடர்  நடவடிக்கை எடுக்கவும், முறையாக விசாரணை நடத்தவும் சிபிசிஐடி விசாரணை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை   சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள உத்தரவு: விழுப்புரம்  மாவட்டம், குண்டலபுலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து  சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜபருல்லா (70) உள்ட 15 பேர் ஆசிரமத்தில் காணாமல்  போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்யப்பட்டது.

கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது பெண் தன்னை ஆசிரமத்தில்  அடைத்து வைத்து சித்ரவதை செய்து நிர்வாகி ஜிபின்பேபி பாலியல் வன்புணர்ச்சி  செய்ததாக அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தென்காசி  மாவட்டத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் (80) மற்றும் முத்து விநாயகம் (48)  ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் மீதான  வழக்கு மற்றும் அனுமதி பெறாமல் ஜிபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியா  விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் சாவடி என்ற இடத்தில் கடந்த 3  மாதங்களாக ஆசிரமம் நடத்தி வந்தது தொடர்பான வழக்கு ஆகிய 4 வழக்குகள்  குறித்து பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது.  எனவே, இந்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 
* தற்போது ஆசிரமத்தில் இருந்த  45 பெண்களில் 15 பெண்கள் மட்டுமே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளனர்.  இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் நேற்று தமிழகம் வந்தார்.ஆசிரமம் புகார்கள் குறித்து சென்னையில் தலைமை செயலர், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு மாலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு வந்தார்.  அவருடன் ஆணையத்தின் வழக்கறிஞர் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது 2 பெண்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் ஆசிரம உரிமையாளர் ஜூபின்பேபி, ஊழியர்கள் தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், ஆசிரமத்தில் மர்மமான சம்பவங்கள் இரவு நேரங்களில் நடந்ததையும் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் குறித்துக் கொண்ட காஞ்சனா கட்டார், தொடர்ந்து குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ஆசிரமத்தில் 2 பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாஜிஸ்திரேட்டிமும் அளித்த வாக்குமூலத்தின் அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம். தொடர்ந்து இந்த ஆசிரமங்கள் தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் பெறப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது  ஆட்சியர் பழனி, எஸ்பி நாதா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

* இதுவரை 6 பேர் காணவில்லை
ஆசிரமத்தில் தங்கியிருந்த பலர் மாயமானது குறித்து தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகிறது. திருப்பூர் ஜபருல்லா, சங்கரன்கோவில் லட்சுமி அம்மாள்(80), அவரது மகன் முத்து விநாயகம்(45), பட்டுக்கோட்டை பத்மா (50), புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த நடராஜன் (42) ஆகியோரை ஆசிரமத்தில் இருந்து காணவில்லையென கெடார் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே திண்டிவனம் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட காளிதாஸ்(60), என்பவரை காணவில்லை என அவரது மகன் இளங்கோ கெடார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் பத்மாவை மனவளர்ச்சி குன்றிய பெண்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

* போதை மறுவாழ்வு மையங்களில் சோதனை நடத்த கோரிக்கை
ஆசிரமங்கள் பாணியில் செயல்படும் போதை மறுவாழ்வு மையங்களையும் சோதனை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. மது, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்கள் சமீபகாலமாக அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, போதை பழக்கத்தை ஒழிப்பதாகக்கூறி போதை மறுவாழ்வு இல்லங்களும் புற்றீசல்கள் போல் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களிலும் கடும் சித்திரவதைகளும், பல்வேறு வகைகளில் அவர்கள் தாக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 2 போதை மறுவாழ்வு மையங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் கடந்த சில மாதங்களில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. சமீபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் போதை மறுவாழ்வு மையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே போதை மறுவாழ்வு மையங்களையும் சோதனை நடத்தி அன்புஜோதி ஆசிரமம் போல் பிரச்னைகள் வராமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Asarma ,Keralava ,Viluppuram ,CPCID ,DGB ,Silendra Babu , Ashram case by Kerala native near Villupuram transferred to CBCID: DGP Sailendrababu orders
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...