×

பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: சிமெண்ட் மீதான வரி குறைக்கப்படுமா?

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி தொடர்பான கவுன்சிலின் கூட்டம், ஒன்றிய நிதியமைச்சர் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பர். கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன.

போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மாநில அமைச்சர்கள், அமைச்சரவை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீது வரி விகிதங்களை குறைப்பது மற்றும் மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி குறித்தும், பான் மசாலா மற்றும் குட்கா வர்த்தகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் மற்றும் வழிமுறைகளை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செஸ் வரி விலக்கை நீட்டிப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல் வரிகளுக்கு இடையே வரி சமநிலையை கொண்டு வருதல்,  பென்சில் ஷார்பனர்கள் மற்றும் தினசரி பயன்படுத்தப்படும் சுகாதார பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிமென்ட் மீது விதிக்கப்பட்டு வரும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருவதால், இவ்விவகாரம் குறித்தும் மாநில அமைச்சர்களிடம் கருத்துருக்கள் கேட்கப்பட்டன. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும்  கூட்டம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு வணிகர்களிடையே  அதிகரித்துள்ளது. இன்றைய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, இன்று மாலை அறிவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : 49th GST Council meeting , 49th GST Council meeting begins as General Budget is tabled: Tax cut on cement?
× RELATED டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில்...