அதிவேக வாகனங்களால் தொடரும் விபத்துகள்; வடமதுரை நால்ரோட்டில் மேம்பாலம் அவசியம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனிக்குமா?

வடமதுரை: வடமதுரை நகரின் வடக்கு பகுதியில் திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டப்படாத காரணத்தால், சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த சாலை விபத்துக்களால் ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக துவக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து வடமதுரை நகர் 17 கி.மீ தொலைவில் திருச்சி ரோட்டில் வளர்ந்து வரும் நகராக உள்ளது. இந்த நகரின் வடக்கு பகுதியில் திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையை வடமதுரை நகரின் வழியாக தெற்கு வடக்காக செல்லும் நத்தம் - வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கிறது.

இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பின் வழியாகத்தான் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை செல்லும் பஸ்களும், திருச்சி சாலையில் தேனி, கம்பம், குமுளி, போடி, சின்னமனுர், மற்றும் திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் விரைவு பேருந்துகளும் இரு மார்க்கத்தில் பயணிக்கின்றன. இவை தவிர பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் நீளமான லாரிகள், கண்டெய்னர் லாரிகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் வழியாகவே செல்கிறது. அத்துடன், வடமதுரை நகரை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் வடமதுரைக்குள் வர இச்சாலை சந்திப்பை கடந்து தான் வந்து செல்லும் நிலை உள்ளது.

இதில் திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டுப்பாட்டிலும், நத்தம் - ஒட்டன்சத்திரம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு திண்டுக்கல் - திருச்சி நான்கு வழி சாலை போடப்பட்டது அப்போது இந்த சாலை சந்திப்பில் ஏனோ மேம்பாலம் கட்டப்படாமல் போனது. அதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வடமதுரை - ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து வடமதுரைக்கு வரும் அனைத்து வாகனங்களும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பை கடந்து தான் வர முடியும். அப்படி வரும்போது நான்கு வழிச்சாலையில் இரு திசைகளிலும் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு இறந்தவர்கள் ஏராளம்.

அத்துடன் திருச்சி ரோட்டில் இருந்து சென்னை, தஞ்சை, திருவாரூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பழனி வரும் பக்தர்களின் சுற்றுலா பஸ்கள் மற்றும் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு போகும் சுற்றுலா வாகனங்களும் ஆம்னி பஸ்களும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் கிழக்கிலிருந்து வந்து வடக்கு நோக்கி ஒட்டன்சத்திரம் ரோட்டில் திரும்பி பயணத்தை தொடர்கின்றன. ஏனெனில் திண்டுக்கல் சென்று பின் அங்கிருந்து ஒட்டன்சத்திரம் வருவதற்கான தூரம் அதிகம் என்பதால் எரிபொருள் செலவு மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. ஆனால் இந்த நான்கு ரோடு சந்தில் வடக்கு நோக்கி திரும்பி வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் செல்வது மிக எளிது என்பதால் இந்த சந்திப்பில் அதிக அளவு போக்குவரத்து நடக்கிறது.

பழனி தைப்பூச விழா காலங்களில் பழனியில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை மற்றும் வட மாவட்டங்கள் செல்லும் அனைத்து அரசு பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் இந்த சாலை வழியாகவே வந்து திருச்சி நான்கு வழிச்சாலையில் தங்கள் பயணத்தை தொடர்கின்றன. இதுபோன்ற நேரங்களில் நான்குவழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் விரைந்து மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதின் அவசியம் குறித்து வடமதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன் என்பவர் கூறுகையில், வடமதுரையை அடுத்துள்ள அய்யலூர், நடுப்பட்டி, வையம்பட்டி போன்ற ஊர்களில் கூட நான்கு வழிச்சாலை அமைக்கும்போது மேம்பாலம் அமைத்துள்ளனர். ஆனால் திண்டுக்கல் மாநகருக்கு அடுத்ததாக வளர்ச்சிடைந்து வரும் வடமதுரையில் தனியார் மில்கள், அரசு, பள்ளி தனியார் பள்ளிகள், அரசுத்துறை அலுவலகங்கள், ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த நகரின் மிக அருகே நான்கு வழிச்சாலை சந்திக்கும் இந்த இடத்தில் மேம்பாலம் கட்டாமல் விட்டுவிட்டனர்.

வாரந்தோறும் சனிக்கிழமை பெருமாள் கோயில் காம்பவுண்டில் நடைபெறும் வாரச்சந்தையில் காய்கறி, மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வடமதுரை நகருக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள், மில் தொழிலாளர்கள் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பை கடந்து வந்து செல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட்டு இறந்தவர்களும், உடல் உறுப்புகளை இழந்தவர்களும் அதிகம் உள்ளனர். ஆகவே இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் விரைவில் மேம்பாலம் அமைத்துக் கொடுத்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்க வேண்டும் என்றார்.

Related Stories: