×

பெண்கள் அனைவரும் படிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்: மேயர் பிரியா அறிவுறுத்தல்

சென்னை: பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும், என மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டமானது இந்தியாவில் ஆண், பெண் விகிதத்தில் நிலவும் இடைவெளியைக் குறைத்து சமநிலைக்கு கொண்டு வரவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வியளித்து, அவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கி உயர்நிலையை அடையச் செய்யவும் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதை தடுத்திடும் வகையிலும், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவும்  இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தமிழகத்தில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், என்ற திட்டம், கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், சென்னை ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள், 2 பெண் குழந்தைகளைப் பெற்று குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்த தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரை மேயர் பிரியா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேயர் பிரியா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சிக்கு என்னை மேயராக தேர்வு செய்த முதலமைச்சருக்கு நன்றி. பெண்கள் தனித்துவமான சிறப்பு வாய்ந்தவர்கள். ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழித்துவிடும் நிலை இருந்தது. இந்த நிலை மாறி தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

எந்த கடினமான சூழ்நிலை இருந்தாலும் பெண் குழந்தைகளை காணும்போது அவை எல்லாம் மறைந்து மகிழ்வு உண்டாகிவிடும். பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டம் குறித்த கண்காட்சியினை மேயர் பார்வையிட்டார். தொடர்ந்து, மேயர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண் குழந்தைகளை போற்றும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பெண் குழந்தைகளைப் பெற்ற 1000 தாய்மார்கள், 2 பெண் குழந்தைகளைப் பெற்று குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 500 தாய்மார்கள், 500 வளரிளம் பெண்கள் ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (கல்வி ஷரண்யா அறி,  நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா, மருத்துவர்கள், செவிலியர்கள், பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Priya , All girls should pay special attention to studies: Mayor Priya advises
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!