மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மேட்டூர் பாலாறு வனப்பகுதியில் கடந்த 14ம் தேதி இரவு, 2 பரிசல்களில் 4 பேர் சென்றனர். அவர்கள், கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு மான் வேட்டைக்குச் சென்றவர்களும், திருப்பி சுட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அங்கிருந்து தப்பிய வேட்டை கும்பல், அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால், கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான்(எ) ராஜா (39) மாயமானார்.
இதனால், கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். அவர்கள் இன்று 3வது நாளாக பாலாற்றங்கரை பகுதியில் தேடுதலை தொடர்ந்தனர். இந்நிலையில் ஈரோடு வனப்பகுதிக்கு உட்பட்ட சொரிப்பாறை என்னுமிடத்தில் கவிழ்ந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. மாயமான காரவடையான்ராஜாவின் உறவினர்களை அழைத்து அதிகாரிகள் காட்டினர். அப்போது சடலமாக கிடந்தவர் காரவடையான் ராஜா என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். காட்டுத்தீ போல் இந்த தகவல் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து சேலம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சடலம் கிடந்த இடம், ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. இதனால் அங்குள்ள போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே கர்நாடக வனத்துறையினரிடம் மேட்டூர் வருவாய் கோட்டாச்சியர் தணிக்காசலம், டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர், துப்பாக்கி சூடு குறித்து விசாரித்துள்ளனர். அதில், வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த 4 பேரை எச்சரிக்க வானத்தை நோக்கி நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம். பதிலுக்கு அவர்கள், எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி விட்டனர் எனக்கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கர்நாடகாவின் மாதேஸ்வரன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்றும், ராஜா உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். பலியான காரவடையன் என்ற ராஜா, ஏற்கனவே 2012ம் ஆண்டு மான் வேட்டைக்கு சென்றபோது, கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தப்பியோடியவர் என்றும் கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு வனப்பகுதியில் சுரக்காமடுவு அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திலும் ராஜா தொடர்புடையவர். ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் மான் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
