×

கடலூர் மத்திய சிறையில் இன்று பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கடலூர்: கடலூர் முதுநகர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான தனசேகர், கடந்த ஒரு வருட காலமாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக் கொண்டு எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணூர் தனசேகரின் தம்பி உட்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இன்று அதிகாலை கைதி தனசேகர் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணி போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore Central Jail ,Ennoor Dhanasekhar , Today in Cuddalore Central Jail, famous rowdy Ennoor Dhanasekhar attempted suicide: intensive care in hospital
× RELATED போக்சோ வழக்கில்...