தமிழ்நாடு அரசின் சார்பில் பிப். 19ல் தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா. திருவுருவச் சிலைக்கு மரியாதை..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பிப். 19ல் தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா. திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் நாளை மறுநாள் (பிப்.19) பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் டாக்டர் உ.வே.சாவின் 169ஆவது பிறந்த நாளான  2023 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாளன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்குக் காலை 10.00 மணிக்கு மலர்வணக்கம்  நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.  

மகா மகோபாத்யாய உ.வே. சாமிநாதையர் தமது இளம் பருவம் முதல் இறுதி நாள் வரையில் தமிழ் ஓலைச்சுவடிகளைக் தேடுவதையும், போற்றுவதையும், ஆராய்வதையும், அச்சிட்டு வெளியிடுவதையும் வாழ்நாட்குறிக்கோளாகக் கொண்டார்.  சங்க நூல்  முதல் பிரபந்த நூல் வகை வரை எழுத்தெண்ணி ஆய்ந்து அச்சிட்டு வெளியிட்டார்.  நூலினுள்ள பாடல்களின் முதற்குறிப்பென்ன ! நூற்கருத்தென்ன ?  எனப்பல திறம்வாய்ந்த சீரார்ந்த குறிப்புகளையும் அவர் வெளியிட்ட ஒவ்வொரு நூலிலும் காணலாகும்.  அத்தகைய குறிப்புக்கள் தமிழ் மாணவர்கட்கு உற்றுழி உதவும் அருநிதிச் செல்வமாய் திகழ்கின்றன. அதனாலன்றோ அவரைத் தமிழ்த் தாத்தா என்றும் அவர் அளித்த தமிழ் நூல்கள் இப்பொழுதும் அறிஞர்களுக்கு அமுத சுரபியாக விளங்கி செந்நெறிப் புலவர்கள் அவரை இன்றும் கொண்டாடுகின்றனர்.

இனியும் என்றும் கொண்டாடுவர். இவ்வாறு தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பிழைகளைத் திருத்தி, உரைக் குறிப்பு  அளித்து, அச்சிட்டு, நூல்களாகக் கொணர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்த இத்தமிழறிஞரின் பணி தமிழ் உலகில் என்றென்றும் நிலைத்து போற்றுதற்குரியதாகும். தண்ணார் இன் தமிழ்த் தாத்தாவின் நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பெருமக்களும்,   அரசு  அலுவலர்களும், தமிழறிஞர்களும், பொதுமக்களும் மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: