×

நாகப்பட்டினம் கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ பேய் சிங்கி இறால்: ஒரு கிலோ 200 கிராம் ரூ900க்கு ஏலம் போனது

வேதாரண்யம்: நாகப்பட்டினம் கோடியக்கரையில் 5 ஆண்டுக்கு பின் மீனவர்கள் வலையில் பேய் சிங்கி இறால் சிக்கியது. ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட இந்த இறால் ரூ900க்கு ஏலம் போனது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து வருகின்றனர். நாள்தோறும் 5 முதல் 20 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது மீனவர்களின் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை மற்றும் நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் வகைகள் கிடைக்கின்றன. இந்நிலையில் நேற்று மீன் பிடிக்கசென்ற மீனவர்கள் வலையில் அதிக அளவில் நண்டு, இறால், சிங்கி இறால் கிடைத்தன. இதில் மடக்கி சிங்கி, மட்டி சிங்கி, மணி சிங்கி மற்றும் ஆழ்கடலில் கிடைக்கும் அரிய வகை இனமான பேய் சிங்கி இறால் ஒன்று இருந்தது. இந்த இறால் ஒரு கிலோ 200 கிராம் எடை இருந்தது. ஆழ் கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த இறாலை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

இது குறித்து கோடியக்கரை மீனவர் நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேலு கூறியதாவது, கோடியக்கரைக்கு சீசன் காலத்தில் 50 வகையான இறால், நண்டு வகைகள் நாள்தோறும் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் மிக அபூர்வ இனமான இந்த பேய் சிங்கி இறால் ஒன்று மட்டும் வந்துள்ளது. ஒரு கிலோ 200 கிராம் எடை இருந்த பேய் சிங்கி இறால் ரூ900க்கு ஏலத்தில் எடுத்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளேன் என்றார்.

Tags : Kodiakarai, Nagapattinam , A rare ghost shrimp caught in the fishermen's net at Kodiakarai, Nagapattinam: 200 grams per kg was auctioned for Rs 900.
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட...